அன்புடையீர்,
வணக்கம்.இந்தப்பதிவில் நோயின் வாயில்கள் பற்றி அறிவோம்.
வணக்கம்.இந்தப்பதிவில் நோயின் வாயில்கள் பற்றி அறிவோம்.
நோயின் வாயில்கள்
நோய் என்பது, துயரம்
துன்பம் குற்றம் என்னும் பொருள்களைத் தருவதாக அமையும். நோய்க்கு உரிய
செயல்களைச் செய்தல் குற்றம். அக்குற்றம் செய்வதனால் வருகின்ற பயனே
துன்பமும், துயரமும். இன்பமும், துன்பமும் பிறர் தர வாரா என்பது ஆன்றோர் வாக்கு. துன்பமும், துயரமும் தருகின்ற நோய் பிறரால் தரப்படுவதில்லை. நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வதென்றோ–தருவித்துக் கொள்வதென்றோ கொள்ளலாம்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்னும் பழமொழி, அளவுடன் இருப்பதே அமிருதம் எனப் பொருள் தருகிறது. அமிருதம் என்பது நோயற்றிருத்தல் என்றாகும்.
நாம் உண்ணுகின்ற உணவும், செய்கின்ற செயலும், எண்ணுகின்ற எண்ணமும் அளவுக்கு மிஞ்சியும் இயற்கையின் தன்மைக்கு மாறாகவும் இருக்குமேயானால், அவையே நோயின் மூலங்களாகி நோய்களை வருவிக்கும் வழிகளை ஏற்படுத்துகின்றன.
நாம் செய்யும் செயல்களில் எவையெல்லாம் நோயைத் தரும் செயல்கள் என்பதை அறிவுறுத்தி, அதன்வழி நடக்கச் செய்வதே மருத்துவ நீதியாகும். நீதிக்குப் புறம்பாக நடப்பது எவ்வாறு நாட்டில் குற்றமாகக் கருதப்படுகின்றதோ, அதைப்போலவே
மருத்துவ நீதிக்குப் புறம்பாக நடப்பது உடலுக்குக் குற்றமாகும். இவ்விரண்டு
நீதிகளுக்கும் புறம்பாக நடந்தால் தண்டனை உண்டு. ஒன்று, நீதிதரும் தண்டனை சிறை. இரண்டாவது உடல்தரும் தண்டனை நோய்.
வாத நோய்க்குரிய குற்றங்கள்
வாத நோய்கள் 84 ஆகும். மலச்சிக்கல், பெருந்தீனி, வாழைரசம், பலாப்பழம், மலைவாழை, மொந்தன் வாழை, கல்வாழை, வத்தக்காய், நந்திக்காய், பரங்கிக் காய், வாழைத்தண்டு, எருமைமோர், தயிர், வெண்ணெய், உணவு உண்டவுடன் போகம், புளி மிகுதி, கொள்ளுடன் பயறு, உளுந்து, தென்னை–பனங்கள், போகம் செய்யும் போது பால்–பழம் உண்ணல், முள்ளங்கி, கடலை, மொச்சை, முற்றிய அவரை, முற்றிய முருங்கை, முக்கனி, பால், சோறு, வெள்ளரிக் காய், செம்மறியும் உடும்பும் சேர்த்துண்ணல் ஆகியவை வாத நோயை வருவிக்கும் வழிகளாகக் கூறப்படுகின்றன.
மேற்கண்ட உணவும், உணவின் கலப்பும் வாத நோயை வருவிக்கும் என்றதனால், அவை உணவுப் பொருள் என்பதையும், முற்றிலும் விலக்குதற்கு உரிய பொருள்களல்ல என்பதையும் கருத வேண்டும். இவ்வகை உணவுகள் புளிப்புச் சுவைக்குரிய உணவுகள் எனத் தெரிவதால், அவை அளவாகவும் புளிச்சுவையை மாற்றக் கூடிய உணவுகளை உண்டால் அது சமநிலையடைந்து நோயை உருவாக்காமல் இருக்கு மெனலாம்.
பித்த நோய்க்குரிய குற்றங்கள்
பித்த நோய்கள் 48 ஆகும். அவை, மனம், செயல், உணவு என்னும் வழிகளால் நோய் வரும் எனப்படுகிறது. அவை காதல், காமம், கோபம், பழி, மன உளைச்சல், வருத்தம், துயரச் செய்தி, மரணச் செய்தி, வஞ்சகம், பகை, பயம், என்னும் மனம் சார்ந்த உணர்ச்சிகளும், உறக்கமின்மை, பட்டினி, செய்வினை, நடை, அலைச்சல், கடற்பயணம், நீண்ட உறக்கம். மருந்தீடு, அபின், கஞ்சா, நீர், மலம் அடக்கல் என்னும் செயல்களும்,மிளகாய், பெருங்காயம், கஞ்சி, உப்பு, வெள்ளுள்ளி, காரம், வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், ஏறண்ட எண்ணெய், தேங்காய் எண்ணெய், மிளகு, வற்றல், திப்பிலி, கடுக்காய், மஞ்சள், போன்றவை பித்தத்தை
உண்டாக்கும் பொருள்களாகக் கூறப்படுகின்றன. பித்தம் உடலைக் காக்கும்
செயலைச் செய்வது என்று கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட பொருள், செயல் ஆகியவை பித்தத்தை உருவாக்கக் கூடியவையாக இருப்பதனால், அதனால் உடலுக்கு நன்மைதானே என்றால் நன்மைதான், எந்த அளவு என்றால், வாதம் ஒன்று, பித்தம் அரை, ஐயம் கால் என்னும் அளவில்தான் இருக்க வேண்டும். அந்த அளவை மீறினால் தான் நோய் வரும் வழிகள் திறக்கப்படும் என்று அறியலாம்.
ஐய நோய்க்குரிய குற்றங்கள்
ஐய நோயின் எண்ணிக்கை 96 எனப்படுகிறது. ஐயம் நீர்த்தன்மையுடையதாக இருப்பதனால் குளிர், குளிர்ந்த பொருள், குளிர்ச்சி என்று ஐயம் வரும் வழியைக் குறிப்பர். அவை, பனி, பலவகை நீர், காலையில் குளிக்காதது, காமம், மருந்தீடு, மணம், சயம், மருவல், சுத்தி செய்யாத மருந்து, பழித்த தோசம், தோசபானம், மழையில் நனைதல், தூக்கம், விஷம், போகம் மிகுதி, அலைச்சல், மந்தம் போன்றவை ஐய நோய்க்குரிய குற்றங்கள் என்பர்.
ஐயம் அழிக்கும் தொழிலுக்குரியதாகையால், வாதத்தின் அளவில் கால் அளவே ஐயம் இருக்க வேண்டும் என்கிறது நாடி நூல். எனவே கெடுதல்/அழிதல் குறைவாக இருந்தால், தானே பாதுகாத்துக் கொள்ளவும் உயிர்வாழவும் முடியும்? அதனால் தான் உடலில் சேரும் பொருளும் கெடுதலைத் தரக் கூடிய பொருள்களாக இருக்கக் கூடாது என்று கருதினர். மேற்கண்ட பொருள்களில், சுத்தி செய்யாத அவிழ்தம், பழித்த தோசம், தோச பானம் ஆகியவை ‘ஒவ்வாமை’யைக் குறிப்பதாகும். ஒவ்வாமை உடலுக்குக் கேட்டினை விளைவிக்கும் என்பதனை அறிந்தே, தமிழ் மருத்துவம் சுத்தி என்னும் தனிப் பிரிவையே மருந்துத் தயாரிப்பில் வைத்துள்ளது. ‘சுத்தியில்லையேல் சித்தியில்லை’ என்பது குறிப்பிடத் தக்கது. சுத்தம் என்னும் பழக்கமும் ஐயத்திலிருந்து விடுபடச் செய்யும். ‘ஒவ்வாமை’ எல்லாம் ஒவ்வாது என்பதும் ஒவ்வாதது. சிறிய அளவு இருந்தால் தான், அது இன்பம். அதனால் அது சிற்றின்பம். அளவு மிகுந்தால் சேரும் துன்பம் எனக் கூறுவதாகக் கருத வேண்டும்.
No comments:
Post a Comment