Thursday, 7 May 2015

நிலமும் நோய்களும்,சுவையும் குணமும்

அன்புடையீர்,
 வணக்கம். இந்தப்பதிவில் நிலமும் நோய்களும்,சுவையும் குணமும்,பற்றி அறிவோம்.

நிலமும் நோயும்
பண்டைய இலக்கிய மரபின்படி நிலம் நான்கு வகையாகப் பிரித்தறியப்பட்டது. அந்தந்த நிலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை நிலை, ஒழுக்கம் என்றுரைக்கப்பட்டது. அவ்வாறு பிரித்தறியப்பட்ட நிலங்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்பன. அந்நிலங்களில் குறிஞ்சியும், முல்லையும் பருவத்தினால் மாற்றமடையும்போது அந்நிலம் பாலை எனப்படும். இந்த ஐந்து நிலத்தையும் ஐந்திணை என்னும் பெயரால் அழைக்கப்பட்டது.
குறிஞ்சியில் ஐயமும், முல்லையில் பித்தமும், நெய்தலில் வாதமும் அதிகரிக்கும். பாலையில் வாத, பித்த, ஐயம் மூன்றும் வளர்ச்சியடையும். மருதத்தில் அம்மூன்றும் கட்டுப் பட்டுச் சமநிலை பெற்றிருக்கும் என்பதிலிருந்து, வாழ்வதற்கு மருதநிலம் ஏற்றது என்று கருதப்படுகிறது. குறிஞ்சி, இரத்தத்தை உறிஞ்சுகின்ற சுரமும், வயிற்றில் ஆமைக் கட்டியும் உண்டாக்கும்; ஐயம் ஓங்கும். முல்லை, வல்லை நோயும் வாத நோயும் உண்டாகும். பித்தம் ஓங்கும். நெய்தல், மெலிந்த உடலைப் பெருக்கச் செய்யும். ஈரலைப் பெருக்கும். குடல் வாயு உண்டாகும். வாத நோய் வளரும். பாலை, வாதம், பித்தம், ஐயம் ஆகிய நோய் அனைத்தும் தோன்றும். மருதம்வாதம், பித்தம், ஐயம் ஆகிய நோய் அனைத்தும் குணமாகும். வாழத் தகுந்த நிலம் மருத மாகும் என்று நிலத்தின் பண்பினால் உடல்வளம் அறியப்பட்டது. மேலும், நிலப் பாகுபாட்டையும், தட்ப வெப்ப நிலையையும், நில வளத்தையும் அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்பட்டதனால், அந்தந்த நிலத்திற்குரிய வெப்பமும் நிலத்தின் வளத்திற்கு ஏற்ப விளைகின்ற உணவுப் பொருள்களை உண்பதினால் உடற்குற்றங்கள் ஏற்படுவதாகக் கொள்ளலாம்.
சுவையும் குணமும்
நிலத்திற்கு நிலம் மண்ணில் வேறுபாடுகள் தோன்றுவது போல், மண்ணின் கனிமங்களும் வேறுபடுகின்றன. அதற்கு ஏற்றவாறு மண்ணின் சுவை அமைந்து, அந்தந்தச் சுவைக்கு ஏற்ப நலன்கள் அமைகின்றன என்பது பண்டைய கால வழக்கு.
"" உவர்ப்பில் கலக்கமாம் கைப்பின் வருங்கேடு
துவர்ப்பிற் பயமாஞ் சுவைகள் அவற்றில்
புளிநோய் பசி காழ்ப்புப் பூங்கொடியே தித்திப்பு
அளிபெருகும் மாத வர்க்கு''
என்று, சிலப்பதிகார காலத்தில் தோன்றிய பரத சேனாதிபதியம் உரைக்கின்றது. உவர்ப்பு கலக்கத்தையும், கைப்பு கேட்டையும், துவர்ப்பு அச்சத்தையும், புளிப்பு நோயையும், கார்ப்பு பசியையும், இனிப்பு நன்மையையும் மனிதர்க்குத் தருவதாக இதன் பொருளமையக் காணலாம்.
அதனால்தான் புள்ளிருக்கு வேளூரைச் சார்ந்த மருத்துவர் வைத்திய நாத ஈசுவரர், நோய் என்று வருகின்றவர்களுக்கு மருந்தாக மண்ணையே வழங்கி வந்தாராம். அந்த மண்ணும் நோயைப் போக்கி மகிழ்ச்சியைத் தந்தது. எவ்வாறென்றால், அம்மருத்துவர் தந்த மண்ணுக்கு உரிய நிலம் மருத நிலம்இனிப்புச் சுவையைக் கொண்டது என்பது பெறப்படுகிறது.
"" மண்டலத்தில் நாளும் வயித்தியராகத் தாமிருந்தும்
கண்டவினை தீர்க்கின்றார், காணீரோ? தொண்டர்
விருந்தைப் பார்த் துண்டருளும் வேளூர்என் னாதர்
மருந்தைப் பார்த் தால்சுத்த மண்.''
என்று காளமேகப்புலவர் உரைக்கக் காணலாம்.
உப்பும் புளியும்
உணவின் சுவையைக் கூட்டுவதற்காக உப்பும், புளியும் உணவின் பாகமாக அமையும். அவை உணவில் பாகமாகக் கொள்ளப் பட்டாலும் இனிப்பு, காரம், கசப்பு ஆகிய சுவைகள் இணைந்து உப்பு, புளிக்குரிய இயல்பான குணத்தை மாற்றிவிடுகின்றன. அவ்வாறிருந்தாலும் உப்பும், புளியும் உடலைப் பாதிக்கக் கூடியதாகவே அமைகின்றன. இவ்விரண்டும் நெஞ்சடைப்பு, கோழை, ஈளை ஆகியவற்றை ஆதியாகக் கொண்டு உருவாகும் நோய்களுக்கு மூலமாக அமை கின்றன. அதன் பொருட்டே மருந்துண்ணும் வேளையில் நோயாளி உப்பையும், புளியையும் விலக்கிட வேண்டுமென்பர். நோய் வாராதிருக்கவும் இவை தள்ளப்பட வேண்டிய தென்று உணர்த்துவதை உணரலாம்.

No comments:

Post a Comment