Thursday, 7 May 2015

கற்பம் உடலைக் காக்கும் மருந்து

அன்புடையீர்,
         வணக்கம். கற்பம் என்றால் என்ன என்பதை இந்தப்பதிவில் அறிவோம்.
கற்பம்
      ‘கற்பம் என்பது உடலைக் காக்கும் மருந்து அல்லது உடலைக் கற்போல் மாற்றுகின்ற கருவி. கற்பம் உண்பவர், நீண்ட நாள் வாழ்வர் என்பதும், கற்பம் உண்டவர் நோயற்ற நிலையடைவார் என்பதும் பொது வழக்கு.
கற்பம் இரண்டு வகையாக உரைக்கப் பெறும். ஒன்று மருந்து கற்பம்; மற்றொன்று யோகக் கற்பம்.
கற்பம் எல்லாப் பொருளினும் சிறந்தது. அல்லது எல்லா முறையினும் சிறந்தது என்பதும் பொருந்தும்.
 
" காலமே யிஞ்சி யுண்ணக் காட்டினார் சூத்தி ரத்தில்
மாலையதி லேக டுக்காய் மத்தியானஞ் சுக்க ருந்த
சூலமே தேக மடா சுக்கிலத்தைக் கட்டி விடும்
ஞாலமே உனது விந்து நற்றேங் காய்போ லாமே''
 
    காலையில் இஞ்சியும், கடும்பகலில் சுக்கும், மாலையில் கடுக்காயும் அருந்தி வந்தால் துரும்பான உடல் இரும்பாகும். விந்து கட்டி, இறுகும். என்பது இதன் கருத்தானாலும், இந்த முறை ஒன்று மட்டும் கற்பமல்ல. மருந்துகளில், மூலிகைளில், சாதன முறைகளில் கற்பங்கள் பல உள்ளன.
 
 " கற்பமுறை முக்க டுகுணவி கற்பமுறை
மூவருக்கங் கட்டை முதலொடு நென் மாத்திரமன்
மூவருக்கங் கட்டையது முன்.''
 
          முக்கடுகு என்பது சுக்கு, திப்பிலி, மிளகு ஆகியன. முதிர்ந்த எருக் கங்கட்டையை வேருடன் கொணர்ந்து வரிசைப் படியே ஒரு மண்டலம், ஒரு நெல்லளவு, சுக்குடன் தண்ணீரில் உண்டால், வாதப் பிணியும், திப்பிலியுடன் உண்டால் பித்தப் பிணியும், மிளகுடன் உண்டால் ஐயப்பிணியும் அற்றுப் போகும் என்பதும் கற்ப முறையில் ஒன்றாகும்.
 
   மூன்று வகை நோயும் இருக்கவொட்டாமற் செய்வதே கற்பத்தின் சிறப்பு என்பதனால், கற்பம் என்பது உடலைக் காக்கும் மருந்தாகும். கற்பம் உண்டால், நெடுங்காலம் உயிர் வாழலாம். உடம்பு கருங்கல்லினைப் போல் உறுதி கொண்டு விளங்கும். சித்தொளி தோன்ற வாழலாம்  என்னும் அகத்தியர் வாக்கினால் கற்பத்தின் சிறப்பினை அறியலாம்.
 
கற்பமுறை:
 
இருக்கவென்று மனம் உரைத்தால் கற்பம் உண்க, 
         என்று கற்ப நூல் கூறுகின்றது. இந்த உடலம் நீண்டநாள் நிலைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே கற்பம் என்னும் முறை கண்டறியப்பட்டிருக்கிறது.
 
" கேளப்பா மண்டலந்தான் ஒருமா வீதம்
கொண்டாக்கால் சிவனவனாய்க் கூடி வாழ்வான்
கொள்ள கற்பமிது கொண்டா யானால்
கோடியுகஞ் சென்றாலுமோ சாவில்லைதான்''
 
      ஒரு சிறிய அளவு, ஒரு மண்டலம் (48 நாள்கள்) கற்பம் உண்டால் மரணமில்லை என்று அறிவிக்கப்படுகிறது. இம்மருந்தை உண்பது எளிதுஅரிது எனக் கருதத் தோன்றுகிறது. ஆனாலும்,
 
 " உருக்கமுடன் பெண்ணாசை பிள்ளை யாø
ஒட்டினால் கற்பமெல்லாம் ஓடிப் போமே.''
 
        கற்பம் உண்ணுகின்ற காலத்திலும், உண்டபின்பும் ஆசைக்கும், பாசத்திற்கும் இடமளித்தால் கற்பம் உண்டது வீணாகும் என்று உரைக்கப்படும். இருப்பினும், உடலில் நோய்கள் தங்காமல் பாதுகாக்க கற்பம் வகை செய்யும். கற்பங்கள், காசினியில் நூற்றெட்டுக் கப்ப மானால், பேசாது மவுனமுற்றுக் கொள்ள வேண்டும்,என்று, கடுமையான கட்டளை பிறப்பிக்கப் படுவதனால், கற்பங்கள் 108 என அறிய முடிகிறது. மூலிகைகள், இரசங்கள், உப்புகள், உபரசங்கள் முதலியவற்றைச் சிறந்த முறையில் மருந்துகளாக அமைத்து, அவற்றை உடல் அழியாமல் இருத்தற் பொருட்டு உபயோகித்தார்கள். அவ்வாறு உபயோகித்த மருந்துகளையே கற்பம் என்பர்.
 
கற்பம் உண்ணும் காலம்
          கற்பம் எப்பொழுது வேண்டுமானாலும், எப்படி வேண்டு மானாலும் உண்ணக் கூடியதாக இல்லை. காலத்திற்கு ஏற்றவாறு உண்ணுகின்ற முறையில் வேறுபாடு வேண்டும் என்று தெரிவிக்கப் படுகிறது. அதாவது,
 
 ஆனி, ஆவணி மாதங்களில் வெல்லத்திலும், சித்திரை, வைகாசி யில் சுக்கு கசாயத்திலும், புரட்டாசி, ஆடியில் குறிஞ்சித் தேனிலும், ஐப்பசி, கார்த்திகையில் குமரிச் சோற்றிலும், மார்கழி, தை, மாசியில் கற்கண்டிலும், பங்குனியில் நெய்யிலும்”  
 
  உண்ணுமாறு உரைக்கப் பட்டுள்ளது.
 
            இதனால், கற்ப மருந்திற்கும், இயற்கைச் சூழலுக்கும் தொடர்பு இருப்பதாகப் புலப்படுகிறது. மருந்தின் துணைப் பொருளாக உரைக்கப் பெற்ற வெல்லம், சுக்கு, குறிஞ்சித் தேன், குமரிச் சோறு, கற்கண்டு, நெய் ஆகிய பொருள்களின் குணத்திற்கும், மேற்கண்ட மாதங்களின் பெரும்பொழுது குணத்திற்கும் ஓர் ஒற்றுமை உள்ளதை உணரலாம்.
 " நானுண்ட படி சொன்னேன் நீயும் உண்ணு''
 
     என்று, தாம் உண்ட முறையைப் பிறர்க்கும் உரைக்கின்ற பாங்கு சிறப்பிற்குரியதாகும்.
 
கடுக்காய் கற்பம்:
        கடுக்காயைத் தேர்ந்தெடுத்து உடைத்து, அமுரியில் ஊறவைத்து மறுநாள் வெய்யலில் காயவைக்க வேண்டும். இவ்வாறு பத்து முறை செய்ய கடுக்காய் சுத்தியாகும். சுத்தி செய்த கடுக்காய் செங்கடுக்காய் ஆகும்.
 

No comments:

Post a Comment