Thursday, 7 May 2015

வர்ம நோய்கள்

அன்புடையீர்,
 வணக்கம்.வர்ம நோய்கள் பற்றி அறிந்துகொள்வோம்.
   
வர்ம நோய்கள்
உடலின் உறுப்புகளில் அல்லது உடற்பகுதிகளில் குறிப்பிடப்படும் நூற்றியெட்டு வர்ம நிலைகளில் ஆயுதங்களாலோ வேறு
பொருள்களாலோ ஏற்படுகின்ற அடி, குத்து, வெட்டு, தட்டு போன்ற காரணங்களால் வர்மம் ஏற்பட்டு, அதனால் ஏற்படுகின்ற விளைவுகள் மரணத்தை ஏற்படுத்தும். வர்மங்கள் நாழிகை, நாள், மாதம், ஆண்டு என்னும் கணக்கில் விளைவுகளைத் தருவன. இவ்வாறான விளைவுகளே நோயாகவும் மாறி உடலைத் துன்புறுத்தும். அவை நோயாகவே கருதப்படும். வர்மப் பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகள் ஒடிவு முறிவு என்றும், ஈடு என்றும் குறிப்பிடப்படும். அவ்வாறானவை, வர்ம விளைவுகள் எனப்படும்.
1. நெஞ்சு பக்கத்தில் காணப்படும் அலகை வர்மத்தில் ஈடு கொண்டால், பற்களைக் கடிப்பதும், சத்தமும் ஏற்படும்.
2. தண்டுவடத்தில் காணப்படும் நட்டெல் வர்மத்தில் முறிவு ஏற்பட்டால், முறிவு கொண்டவன் நாய் போல் அமர்வான். அவன் நாவில் சுவை உணர்வு தோன்றினால் 90 நாளில் மரணமும், சுவை காணப்படாவிட்டால் 300 நாளில் மரணமும் உண்டாகும்.
3. பஞ்சவர்ணக் குகையாகிய நெஞ்சறையின் அருகிலுள்ள அக்கினி நரம்பில் முறிவு ஏற்பட்டால், உடல் முழுவதும் காந்தும். உடலில் எறும்பு ஊர்வது போன்று தோன்றும். 
4. பழு எலும்பில் காணப்படும் விட்டில் வர்மத்தில் ஈடு கொண்டால், உடல் தீப்போல எரியும். விட்டில் போல் உடல் துடிக்கும்.
5. நீர்ப்பையோடு இணைந்திருக்கும் நீர் நரம்பு முறிந்தால் சன்னி உண்டாகும்.
6. கண்ணின் இமை அருகில் உள்ள பகலொளி நரம்பு முறிந்தால், பார்வை போகும். 
7. தலை உச்சியின் நடுவில் உள்ள குருபோக நரம்பு முறிந்தால், போகம் கழிந்தபின் ஏற்படும் உணர்வு உண்டாகும். 
8. முதுகிலுள்ள தாரை நரம்பு முறிந்தால், சேவல் போலக் கொக்கரிக்கச் செய்யும்.
9. தேரை நரம்பு முறிந்தால், உடலில் நிறம் மாறித் தேரை நிறம் போலாகும். 
10. குண்டிச் சங்கு நரம்பு முறிந்தால் தாகத்தினால் வருந்த நேரும்.
11. மூச்சுக் குழலின் இடது பக்கத்திலுள்ள குயில் நரம்பு முறிந்தால், குயில்போல ஒலி யெழும். சன்னி உண்டாகும்.
12. பீசத்தின் மேற்புறத்தில் காணப்படும் கொட்ட காய நரம்பு முறிந்தால், வேகமாக ஓடச் செய்யும்.
13. இதயத்தின் அருகில் பதிவிருதை வர்மம் முறிந்தால், நீண்ட மூச்சு ஏற்படும். நினைவு தடுமாறும். பிறரைக் கண்டால் நாணம் உண்டாகும். மிகுந்த போக உணர்வு ஏற்படும். கண்களை உருட்டும். வண்ணத்தைக் கண்டு நாணும்.
14. பிருக்கத்துடன் இணைந்திருக்கும் குக்குட நரம்பு முறிந்தால், சேவலாகக் கொக்கரிக்கும்.
15. குய்யத்திற்கு இருவிரல் மேலே காணப்படும் பாலூன்றி நரம்பு முறிந்தால், சுரம் உண்டாகும். இரத்தம் பால் போல ஒழுகும்.
16. முதுகிலுள்ள கூச்சல் நரம்பு முறிந்தால், கருச்சிதைவு உண்டாகும். 217ஆம் நாளில் கூம்பு வர்மத்தில் நீல நிறமும், முகத்தில் மஞ்சள் நிறமும் தோன்றும்.
17. தலை உச்சியின் நடுவிலுள்ள துண்டு நரம்பு முறிந்தால், உடனே உயிர் பிரியும்.
18. நெஞ்சறையின் இடக்குய்யத்தில் மயிர்க் கூச்சல் நரம்பு முறிந்தால், உடல் வளைந்து குன்னிக் கொள்ளும், மயிர்க் கூச்சமும் இதயத் துடிப்பும் அதிகரிக்கும்.
19. முதுகின் நடுவில் புயம் அருகில் தீபார நரம்பு முறிந்தால், ஆண்குறி பாதித்து கறுப்பாகும்.
20. கண்ணின் அருகில் உள்ள மாற்றான் நரம்பு முறிந்தால், தலை இடிக்கும். உடல் பொன்னிறமாகும். கண் மஞ்சளாகும். கொக்கரித்தல் செய்யும். சுவாசித்தல் கடினமாகும்.
21. புச்ச என்பின் அருகில் பலமாக வர்மம் கொண்டால், விசை நரம்பு தளர்ந்து 90 ஆம் நாள் வாதம் வரும். விந்து வெளியேறிக் கொண்டே இருக்கும்; இரு கால்களும் செயலற்றுப் போகும்.என்று கூறப்பட்டுள்ளன.
வர்மம் என்பதை விபத்து போன்று எதிர்பாராமல் ஏற்படுகின்ற பாதிப்புகளாகக் கருதலாம். இவ்வாறான பாதிப்புகளிலிருந்து விடுபடவும், மருத்துவம் காணவும் அவசர கால நடவடிக்கை தேவைப்படும். வர்ம மருத்துவ   முறை, விபத்து மருத்துவ முறை என்றால் பொருத்தமாக இருக்கும். அவ்வாறான அவசரமான மருத்துவத்தையும் சித்த மருத்துவத்துறை விரிவு படுத்தி வளர்த்து வந்திருக்கிறது என்பதை, அதனால் ஏற்படுகின்ற விளைவுகளை எடுத்துக் கூறியிருக்கும் முறையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
நோய்நாடித் தேர்வு செய்யும் முறைகளால் நோயை அறிந்து கொள்வதில், குத்து/வெட்டு என்பவற்றினால் சுமார் 700 நோய்கள் உண்டாகுமென்று கணிக்கப்பட்டுள்ளது. அவற்றுள் வர்மத்தினால் ஏற்படும் விளைவுகளும் அடங்கும் எனலாம்.






No comments:

Post a Comment